தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் சமீபத்தில் முதல் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்ததோடு சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டத்தையும் நடத்தினார். அந்த செயற்குழு கூட்டத்தின் போது மாநில
மற்றும் மத்திய அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து அவர் 26 தீர்மானங்களை நிறைவேற்றினார். விஜய் கட்சி தொடங்கிய நிலையில் திமுகவை நேரடியாக அரசியல் எதிரி என்ற அறிவித்ததோடு பாஜகவை மறைமுகமாக விமர்சனம் செய்கிறார். அதே சமயத்தில் அதிமுகவை மட்டும் விஜய் விமர்சிக்கவில்லை. இந்த நிலையில் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதிலிருந்து பல்வேறு தலைவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து கூறிய விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் அன்புமணி ஆகியோருக்கும் வாழ்த்து கூறினார்.
அதே சமயத்தில் நேற்று பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசனுக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயை கடுமையாக விமர்சித்துவரும் நிலையில் தற்போது அவருக்கு என்னுடைய சகோதரர் என்று கூறி விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் கூட்டணியை மனதில் வைத்து தான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விஜய் வாழ்த்து சொன்னதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் நீடிப்பதால் அவருக்கு வாழ்த்து சொல்லவில்லை என்றும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் தற்போது கமல்ஹாசனுக்கு வாழ்த்து சொல்லாத விஜய் தன்னை கடுமையாக விமர்சித்து வரும் சீமானுக்கு வாழ்த்து கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.