கந்துவட்டி வாங்குபவர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை…. டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!

கந்துவட்டி வாங்குபவர்களின் சொத்துக்களை முடக்குமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த‌ ஆலோசனைக் கூட்டத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் தமிழக டி.ஜி.பி சட்டம் ஒழுங்கு குறித்து பேசினார். இதனையடுத்து மாவட்டம்  முழுவதும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை, கந்துவட்டி தொடர்பான பிரச்சனைகளை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டார்.

அதன் பிறகு மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை டி.ஜி.பி வழங்கினார். இதைத்தொடர்ந்து டி.ஜி.பி சைலேந்திரபாபு செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அதில் கந்துவட்டி பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் 238 புகார்கள் பெறப்பட்டுள்ளது என்றார். இதில் 178 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்குவது போன்று கந்துவட்டி வசூலிப்பவர்களின் சொத்துக்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் கஞ்சா பயிர் செய்வது முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது என்றும், வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக போதைப்பொருள் கடத்தி வருவதை தடுப்பதற்காக ரயில்வே போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், கஞ்சாவை மட்டும் கண்டுபிடிக்கும் வகையில் மோப்ப நாய்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்படுகிறது என்றும் கூறினார். மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை போன்றவற்றில் ஈடுபட்ட 80 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது எனவும், மாவட்ட முழுவதுமாக 1,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *