கண் பார்வை இழந்தவருக்கு 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சோழபுரம் பகுதியில் மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2002-ஆம் ஆண்டு தளவாய்புரம் பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் மூக்கையாவின் 5 வயது மகனுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதனை அடுத்து மதுரையில் சிறுவனுக்கு வலது கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது மருத்துவரின் கவனக்குறைவு காரணமாக சிறுவனுக்கு கண் பார்வை பறிபோனது.
இதனால் நஷ்ட ஈடு கேட்டு மூக்கையா ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் கண்பார்வை இழந்தவருக்கு 8 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட கண் மருத்துவமனைக்கு உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்டவரின் மன உளைச்சலுக்காக 2 லட்ச ரூபாய், வழக்கு செலவு தொகை 10,000 ரூபாய் ஆகியவற்றை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.