கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவர் குளச்சல் நகராட்சியில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு தனுஷ்கோடி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதனால் அவரது மனைவி வளர்மதிக்கு கருணை அடிப்படையில் 2022-ஆம் ஆண்டு பத்மநாபபுரம் நகராட்சியில் அலுவலக உதவியாளராக பணி கிடைத்தது. பின்னர் அவருக்கு காசாளராக பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.

அவர் நகராட்சி கல்வி வசூல் மையத்தில் காசாளராக வேலை பார்த்தபோது ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே நகராட்சியின் வகை கணக்கில் செலுத்தி விட்டு மீதி பணத்தை கையாடல் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்த போது வளர்மதி 12 லட்சத்து 63 ஆயிரத்து 395 ரூபாய் வரை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் இது குறித்து விசாரணை நடத்தி வளர்மதி அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர். நேற்று பத்மநாபபுரம் நகராட்சி கமிஷனர் முனியப்பன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வளர்மதியை கைது செய்தனர்.