
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் புதூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்த நிலையில் ராஜ்குமாருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அகிலா என்ற பெண் பழக்கமானார். இருவரும் நட்பாக பழகி நாளடைவில் காதலிக்க ஆரம்பித்தனர். கடந்த ஆறு மாதமாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ராஜகுமாரும் அகிலாவும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். கடந்த சில மாதங்களாக ராஜ்குமாரின் நடவடிக்கையில் அகிலாவுக்கு சந்தேகம் வந்தது.
ராஜ்குமார் இன்ஸ்டாகிராமில் பல போலி ஐடிகளை உருவாக்கி பெண்களுடன் பேசி வந்துள்ளார். இதுகுறித்து அகிலா கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ராஜ்குமார் அகிலாவை அடித்து துன்புறுத்தி உள்ளார். கடந்த ஒன்பதாம் தேதி சொந்த ஊருக்கு சென்ற ராஜகுமாரை தேடி அகிலா சென்றார். அப்போது ராஜ்குமாரின் தந்தை தனது உறவினர்களுடன் சேர்ந்து அகிலாவை துரத்தியதாக தெரிகிறது. இது குறித்து அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள் அகிலாவை மீட்டு திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருக்கும் மையத்தில் தங்க வைத்தனர்.
ராஜ்குமார் அகிலாவை திருமணம் செய்ய முடியாது என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த அகிலா தனது வாழ்க்கையை நாசமாக்கி விட்டதாக கூறி திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிறதீப்பிடம் புகார் அளித்துள்ளார். தன்னைப் போலவே பல பெண்கள் ராஜ்குமாரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவம் மற்ற பெண்களுக்கு நடக்கக்கூடாது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகிலா புகாரில் குறிப்பிட்டுள்ளார்.