கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நம்பி ராஜேஷ் (40)-அம்ருதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நம்பி ராஜேஷ் ஓமன் நாட்டில் உள்ள ஒரு இந்திய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதனால் அம்ருதா தன் குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி நம்பி ராஜனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று கூறியதால் அம்ருதா ஓமன் செல்ல டிக்கெட் எடுத்துள்ளார்‌.

கடந்த 8-ம் தேதி அவர் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அன்றைய தினம் ஏர் இந்தியா விமான ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் விடுமுறை எடுத்ததால் விமான சேவையானது ரத்து செய்யப்பட்டது‌. இதைத்தொடர்ந்து விமான நிறுவன ஊழியர்களிடம் அம்ருதா முறையிட்டார். இதனையடுத்து கடந்த 9-ம் தேதி அவருக்கு மஸ்கட் செல்ல  டிக்கெட் வழங்கப்பட்ட  நிலையில் அன்றைய தினமும் ஊழியர்கள் பணிக்கு வராததால் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் செல்ல நினைத்தபோது டிக்கெட் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் நம்பிராஜேஷ் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் தன் மனைவியுடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு படுக்கையிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக அவருடைய மனைவிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைக் கேட்டவுடன் அம்ருதா கதறி அழுதார். மேலும் தன் கணவரை ஒருமுறை கடைசியாக பார்க்க வேண்டும் என்று நினைத்த மனைவியின் எண்ணம் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களின் வேலைநிறுத்ததால் நிறைவேறாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.