கடன் வசூலிக்க வந்த தனியார் நிறுவன ஊழியர் கடனை வாங்காமல் திரும்பி போக மாட்டேன் என்று கட்டிலில் படுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலுார் அருகே காக்காயன் குளத்துப்பட்டியில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கடன் வசூலிக்க வந்தபோது, அத்துமீறி பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து கட்டிலில் படுத்துக் கொண்டார். காக்காயன் பட்டியை சேர்ந்த 37 வயது இளம்பெண் கூலி வேலை செய்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டம், வையம்பட்டி தனியார் நிறுவனத்தில் கடன் பெற்றிருந்தார். கொரோனா சூழல் காரணமாக அவரால் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
இந்நிலையில் மாதத் தவணை செலுத்த தவறியதால், கடன் வசூலிக்க வந்த ஊழியர் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து கட்டிலில் படுத்துக்கொண்டு ‘பணம் வாங்காமல் இங்கிருந்து போகமாட்டேன்’ என்று கூறியுள்ளார். இதனை அந்த கிராமமே வேடிக்கை பார்த்தது. இதனால் அந்தப் பெண் அவமானம் தாங்க முடியாமல் வீட்டிற்குள் வெளியே அழுதுகொண்டே நின்றிருந்தார். அப்பகுதி சமூக ஆர்வலர்கள் ஊழியரின் செயலை படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். பின்னர் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த ஊழியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.