ஓரினசேர்க்கைக்கு மறுத்த முதியவர்… வாலிபர் செய்த கொடூர கொலை…!!!

தேனி மாவட்டம் அருகே ஓரினசேர்க்கைக்கு முதியவர் மறுத்ததால் அவரை இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி ராமர் கோவிலில் பொன்ராம் என்ற 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் மகள் மாரியம்மாள் அதே ஊரில் பக்கத்து தெருவில் வசித்து வந்த நிலையில், பொன்ராம் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 16 ஆம் தேதி பொன்ராம் வீட்டிற்கு அவரது மகள் சென்று பார்த்தபோது அங்கு தனது தந்தை உயிரிழந்த கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரின் கழுத்துப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டு இருந்ததால் அவருக்கு சந்தேகம் எழுந்தது. உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அருண் பாண்டியன் என்ற 20 வயது இளைஞரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது. அருண்பாண்டியன், பொன்ராம் வீட்டிற்குச் சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமாறு அவரை வற்புறுத்தி உள்ளார். அதற்கு பொன்ராம் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

இதனை வெளியில் கூறி அசிங்கப்படுத்தி விடுவேன் என்று பொன்ராம் தகராறு செய்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அருண்பாண்டியன், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்தனர்.