சென்னைக்கு ஓராண்டுக்கு தேவைப்படும் தண்ணீர் ஒரே நாளில் வீணாக கடலில் கலப்பது கண்ணீரை வரவழைக்கின்றது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணைக்கு மிக அதிக அளவில் தண்ணீர் வருவதால் வினாடிக்கு 1.7 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்படுவதாகவும் அன்புமணி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஒரு நாளைக்கு 15 டிஎம்சி காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதாகவும் இது கண்ணீரை வரவழைக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி காவேரி உபரி நீர் திட்டத்திற்கு ஆண்டுக்கு தேவைப்படும் இரண்டு டிஎம்சி அளவு தண்ணீரை மூன்று மணி நேரத்தில் தமிழக அரசு வீணாக்குகிறது எனவும் கூறினார். காவேரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் குறுக்கே 10 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணையை கட்ட வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ஆனால் அதை செய்வதற்கு மாறாக 10 கிலோமீட்டர் ஒரு மணல் குவாரியை தமிழக அரசு அமைத்து வருகிறது எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.