ஓட்டு போட அடையாள அட்டை தான் வேணுமா..? இதை காண்பித்தும் வாக்களிக்கலாம்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களித்து கொள்ளலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்காளர்களும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 11 அடையாள ஆவணங்களை, வாக்குப்பதிவின் போது புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை காண்பிக்க இயலாத வாக்காளர்கள் அதனை காண்பித்து வாக்களிக்கலாம்.

அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, ஆதார் அட்டை, அஞ்சலக கணக்கு புத்தகம், புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, நிரந்தர கணக்கு எண் அட்டை, ஓட்டுநர் உரிமம் , தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், இந்தியா கடவுச்சீட்டு, மத்திய-மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டுவந்து வாக்காளர்கள் காண்பித்து வாக்களிக்கலாம். சட்டமன்ற, நாடாளுமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டைகளை பயன்படுத்தியும் வாக்கு பதிவு செய்யலாம். தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் தகவல் சீட்டை மட்டும் பயன்படுத்தி எந்த ஒரு வாக்காளரும் வாக்களிக்க இயலாது பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி ஸ்ரீ வெங்கட பிரியா இந்த தகவலை ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.