ஓடும் பேருந்தில் துணிகர செயல்… அதிர்ச்சியில் உறைந்து போன தம்பதி… பெரம்பலூரில் பரபரப்பு..!!

பெரம்பலூரில் ஓடும் பேருந்தில் மர்ம நபர் தம்பதி மீது மயக்க மருந்து தெளித்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தாலுகா நம்புக்குறிச்சி கிராமத்தில் அருள்மொழி என்பவர் வசித்து வந்தார். இவர் சென்னையில் உள்ள தி.நகரில் தற்போது கணவருடன் வசித்து வருகிறார். சென்னையிலிருந்து நம்புக்குறிச்சி கிராமத்திற்கு வருவதற்காக ஏப்ரல் 1-ஆம் தேதி தனியார் பேருந்தில் அருள்மொழி கணவருடன் பயணம் செய்தார். அப்போது தம்பதியின் மீது பேருந்தில் பயணம் செய்த மர்ம நபர் ஒருவர் மயக்க மருந்தை தெளித்துள்ளார். அதில் அவர்கள் இருவரும் மயங்கினர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்த ரூ. 5 ஆயிரம் பணத்தையும், 10 பவுன் நகையையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின் மயக்கம் தெளிந்த அவர்கள் பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் அருள்மொழி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.