தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று கீழ்பெண்ணாத்தூர் தொகுதி தி.மு.க எம்எல்ஏ பிச்சாண்டி பேசியதாவது, ஒசூரில் அமைய உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 6 ஆயிரம் பெண்களுக்கு வேலை தருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலைவாய்ப்பு குறித்து கிராமத்திலுள்ள பெண்களுக்கு தெரியாமல் இருக்கிறது. இதுகுறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்களா..? அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?.. என கேள்வி எழுப்பினார்.
இதற்கு தொழிற் துறை அமைச்சரான தங்கம் தென்னரசு பதிலளித்ததாவது, டாடாவின் விரிவாக்கம் செய்யப்படும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 6 ஆயிரம் பேர் மட்டுமின்றி, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றும் சூழல் காணப்படுகிறது. அதேநேரம் ஓசூரில் டாடா, ஓலா என எந்தவொரு நிறுவனத்திலும் பெண்களுக்கு வேலைவாய்ப்பானது கொட்டி கிடக்கிறது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரையிலும் பல மாவட்டங்களில் நேர்முகத் தேர்வை நடத்தி இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களிலும் தேர்வு நடத்தி, அதன் வாயிலாக ஓசூரில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இது பற்றிய முழு விபரத்தையும் விளம்பரமாகவே டாடா நிறுவனம் வெளியிட்டு உள்ளது. பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தருவதில் மாநில அரசின் தொழிற் துறையும் கைகோர்த்து செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்..