குமரி மாவட்டத்தில் 4 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்டம் வாரியாக குற்றச் சம்பவங்களை குறைக்க தமிழ்நாடு போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க மாவட்ட அளவிலான தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவான குற்றவாளிகளை பிடித்து வழக்குகளை முடித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 சரித்திர குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கொலை முயற்சி மற்றும் அடிதடி மோதல் போன்ற வழக்குகளில் தொடர்புடைய தருமபுரம் பகுதியைச் சேர்ந்த சுயம்புலிங்கம் என்ற வாலி (42), தென்தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்த செல்வம் (38), ராமன்புதூரை சேர்ந்த சஞ்சய் பிரபு (23), அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த வீரமணி (23) ஆகிய நான்கு பேரும் இவ்விதமாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான நான்கு பேரின் பெயர்களும் ரவுடிகள் பட்டியலில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இது  தொடர்பாக போலீஸ்சூப்பிரண்டு மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்த நிலையில் அவர் ஒப்புதல் கொடுத்ததை தொடர்ந்து குற்றவாளிகள் நால்வரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.