
ஆங்கில புத்தாண்டு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல்லுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்று முந்தைய நாளை விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் புத்தாண்டை வரவேற்று சுற்றுலா பயணிகள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளனர். பின்னர் உடலுக்கு இதமாக எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு சினி பால்ஸ், மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
இதனையடுத்து பாதுகாப்பு உடை அணிந்து, சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் உற்சாகமாக பயணம் செய்து இயற்கை அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் ஹோட்டல்கள் மற்றும் சாலையோர கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றது. மேலும் போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.