
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஜோங்னான் பொருளாதாரம் மற்றும் சட்ட பல்கலைக்கழகத்தில், கடந்த ஜூன் 24ஆம் தேதி நடந்த கணக்கியல் தேர்வின்போது, ஒரு ஆண் மாணவன் பெண் வேடமணிந்து ஆள்மாறாட்டம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.
ஒரு பெண் மாணவியின் பெயரில் தேர்வெழுத வேண்டும் என்பதற்காக, அந்த மாணவனுக்கு விக், முகமூடி, பெண்கள் உடை போன்றவை அணியச் செய்து தேர்வு அறைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. மிகவும் நுணுக்கமாக செய்த மாறுவேடம் ஆரம்பத்தில் கண்காணிப்பாளர்களை ஏமாற்றியது. ஆனால் தேர்வறையில் பங்கேற்ற ஒரு விழிப்பான ஆசிரியர், அந்த மாணவனின் விக்கை சந்தேகித்து அருகில் வந்து கவனித்தபோது உண்மை வெளிவந்தது.
கண்காணிப்பாளர் விக்கை கழற்றச் சொன்னவுடன், ஆள்மாறாட்டம் செய்த மாணவன் ஓடிவிட்டார். இதையடுத்து, மற்றொரு மாணவி அவர் யார் என்று அடையாளம் கண்டுபிடித்து தகவலை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சம்பவம் பெரிதாக பரவியதும், பல்கலைக்கழகமும் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்க வேண்டிய நிலைக்கு வந்தது.
ஜூன் 25 அன்று வெளியிட்ட அறிக்கையில், “லி” என்ற பெண் மாணவி, ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு ஆணை தனது சார்பாக தேர்வெழுத ஏற்பாடு செய்திருந்ததாக பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியது. இது கல்வி முறைகேடாக கருதி, மாணவி லி மீது கல்வி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர் வெளியேற்றப்படுவதை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு வந்த ஆண் மாணவனின் அடையாளம் தற்போது பல்கலைக்கழக நிர்வாகத்தாலும், உள்ளூர் காவல்துறையாலும் தீவிரமாக விசாரணை செய்யப்படுகிறது. சம்பவத்தில் பண பரிமாற்றம் இடம்பெற்றதா என்பது தெளிவாகவில்லை என்றாலும், இது போன்ற செயல்கள் சீனாவின் கல்வித்துறை மீது நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையிலும், கம்ப்யூட்டர் அடையாள சோதனைகளின் பிழைகளை வெளிக்கொணர்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பான படங்களும் தகவல்களும் வீடியோவுடன் இணையத்தில் வைரலாக, சீனாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் பலர், “கல்வியில் நேர்மை தவிர வேறு எந்த பாதையும் இல்லை” எனக் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் இதே போன்று கல்வி நிறுவனங்கள் அடையாள சோதனை முறைகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.