ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொள்ள இருக்கிறது. இந்த தொடரில் கலந்துகொள்ள இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா செல்லாதா என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது பிசிசிஐ பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே மோதல் போக்கு நிலவும் நிலையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு சென்றால் ஆபத்து என்பதால் பி சி சி ஐ பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்களை செல்ல அனுமதிக்காது என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் வழங்காது என்று தகவல் வெளிவந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாததால் இந்திய அணி கலந்து கொள்ளும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடைபெற்ற நிலையில் தற்போது இந்தியா பாகிஸ்தான் செல்லவில்லை என்றால் இந்திய அணியை தவிர்த்து விட்டு பிற அணிகளை வைத்து போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சங்கத்தின் தலைவர் மோசின் நக்வி இந்திய வீரர்கள் கண்டிப்பாக சாம்பியன்ஷிப் தொடரில் கலந்து கொள்ள பாகிஸ்தான் வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானுக்கு பதிலாக இந்திய அணிகள் மோதும் போட்டியை மட்டும் வேறு நாட்டில் மாற்றி வைக்க ஐசிசியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தொடர்பாக ஐசிசி இன்னும் முடிவெடுக்காத நிலையில் தற்போது பிசிசிஐ இந்திய அணி பாகிஸ்தான் சென்று எந்த காரணத்திலும் விளையாடாது என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.