சென்னை ஐகோர்ட் ஆவின் நுழைவு வாயில் முன்பாக 50 வயதுடைய நபர் ஒருவர் நேற்று திடீரென தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், பெண் காவலர்கள் அதிரடியாக செயல்பட்டு அந்த நபர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றியுள்ளனர். அதன் பின் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த குணசேகரன் என்பது தெரியவந்துள்ளது.

இவர் சென்னையை அடுத்துள்ள கீழ கட்டளையில் சலூன் கடையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2014 -ஆம் ஆண்டு அவரது தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கு சேலம் ஐகோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் இது குறித்து முதல் அமைச்சர் பிரிவின் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தீக்குளிக்க வந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை எச்சரிக்கை செய்து இனி இது போல் செயல்களில் ஈடுபட மாட்டேன் என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.