ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து கிழிந்த 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி சீனிகடை முக்கம் கச்சேரி வீதியில் தனியார் நிறுவன ஏ.டி.எம் எந்திரம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம் எந்திரத்தில் இடையங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுதா என்பவர் 2000 ரூபாய் பணம் எடுத்துள்ளார். அப்போது கிழிந்த நிலையில் ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் வந்ததை பார்த்து சுதா அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவசர தேவைக்கு சுதாவுக்கு பணம் தேவைப்பட்டதால் மீண்டும் 2000 ரூபாய் பணம் எடுத்துள்ளார்.
அப்போதும் கிழிந்து தீப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள் வந்தது. இதேபோல் மற்ற வாடிக்கையாளர்களுக்கும் கிழிந்த நோட்டுகள் வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சுதா கூறும்போது, பொதுமக்கள் அவசர தேவைக்காக ஏ.டி.எம்-மில் இருந்து பணம் எடுக்கின்றனர். ஆனால் பயன்படுத்த முடியாத நிலையில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வருவதால் சிரமப்படுகிறோம். எனவே வங்கி அதிகாரிகள் இதுபோன்ற ஏ.டி.எம் மையங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.