“என் மனைவிகூட சேர்த்து வைங்க”…. தற்கொலை மிரட்டல் விடுத்த கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

சென்னை திருவொற்றியூர் சிவசக்தி நகரில் வசித்து வருபவர் கட்டிடத்தொழிலாளி செந்தில்குமார் (39). இவருக்கு திருமணமாகி வடிவுக்கரசி(37) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் செந்தில்குமார் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை சந்தேகப்பட்டு சண்டை போடுவதாக தெரிகிறது. இதன் காரணமாக சென்ற மாதம் அவருடைய மனைவி, கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து பல முறை மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு செந்தில்குமார் அழைத்துள்ளார். ஆனால் அவர் வராததால், பிரிந்து சென்ற தனது மனைவியை என்னுடன் சேர்த்து வைக்குமாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செந்தில்குமார் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். எனினும் அவரது புகார் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த செந்தில்குமார், நேற்று காலை 6 மணியளவில் திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகேயுள்ள சுமார் 200 அடி உயரமுள்ள பி.எஸ்.என்.எல். நிறுவன செல்போன் கோபுரத்தில் ஏறி நின்றுகொண்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்புகொண்டார். இந்நிலையில் பிரிந்துசென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படியும், இல்லையெனில் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டினார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர் மீரான் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் செந்தில்குமாரிடம் செல்போன் வாயிலாக பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

அதாவது அவருடைய மனைவியோடு பேச்சுவார்த்தை மேற்கொண்டு சேர்த்து வைப்பதாக காவல்துறையினர் வாக்குறுதி அளித்தும், அதை செந்தில்குமார் ஏற்கவில்லை. அதன்பின் மனைவியை இங்கு அழைத்து வந்தால்தான் கீழே இறங்குவேன் என செந்தில்குமார் கூறினார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் நந்தியம்பாக்கத்தில் இருந்த செந்தில்குமாரின் மனைவியை அழைத்து வந்தனர். பின் மனைவியை பார்த்ததும் செந்தில்குமார் கீழேஇறங்கி வந்தார். அதன்பின் செந்தில்குமாருக்கு மனநல ஆலோசனை வழங்க அவரை எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *