என்னை கைது செய்த அதிமுக அரசு, சென்னை வந்த அமித் ஷாவை ஏன் கைது செய்யவில்லை? உதயநிதி கேள்வி

என்னை கைது செய்த அதிமுக அரசு, மத்திய அமைச்சர் அமித் ஷாவை கைது செய்யாதது ஏன் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

2021ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று இரண்டாவது நாளாக உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு உள்ளிட்டோரை நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அருகிலிருந்த மண்டபத்தில் அனைவரும் அடைக்கப்பட்டனர். நேற்று மதியம் 12 மணியளவில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு உள்ளிட்டோரை சுமார் 9 மணி நேரத்திற்கு பின் காவல்துறையினர் காவலில் இருந்து விடுவித்தனர். அதனைத் தொடர்ந்து சிக்கல், பால்பண்ணைச்சேரி, நாகூர் உள்ளிட்ட இடங்களில் தனது பரப்புரையை உதயநிதி தொடர்ந்தார்.

உதயநிதி கேள்வி

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” இந்த எழுச்சியையும், மக்களின் வரவேற்பையும் தாங்க முடியாமல் அதிமுக அரசு கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. வன்முறை நடக்கக் கூடாது என்பதற்காக நான் கைதானேன். மீதமுள்ள நான்கு நிகழ்ச்சியையும் முடித்துவிட்டு செல்வேன் என்று காவல்துறையிடம் சொல்லியிருக்கிறேன். தொடர்ந்து எங்கள் பிரசாரத்திற்கு காவல்துறை தடை விதித்தால் நீதிமன்றம் செல்வோம்.

என்னை கைது செய்த அதிமுக அரசு, சென்னை வந்த அமித்ஷாவை ஏன் கைது செய்யவில்லை? துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுடன்தான் அதிமுக கூட்டணி எனக் கூறியிருப்பது திமுகவிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதிமுக அரசு செய்த ஊழல் பட்டியல் பாஜகவிடம் உள்ளதால்தான் அனைவரும் அடிமையாக உள்ளனர்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *