“என்ன அடிக்க யார் உரிமை கொடுத்தா…?” போலீஸ் ஸ்டேஷனில் படுத்துக் குடிமகன் அட்டூழியம்…!!

மதுகுடித்தவரை விரட்டியடித்ததால் ஆத்திரம் கொண்ட வாலிபர், என்னை அடிக்க யார் அதிகாரம் கொடுத்தா? என்று கேள்வி கேட்டு ஸ்டேஷனில் படுத்துக்கொண்டே நியாயம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலத்தில் உள்ள டவுன் ரயில்வே ஸ்டேசன் எதிராக டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மதுவாங்க செல்லும் ஆசாமிகள், ரோட்டில் நின்று கொண்டும், வீடுகளின் முன்பு கூட்டமாக அமர்ந்து கொண்டும் மதுகுடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம், அங்குள்ள ஒரு வீட்டின் வாசலில், சிலர் கூட்டமாக  மது குடித்தனர். இது பற்றி அந்த வீட்டின் உரிமையாளர் கொடுத்த தகவலின் பேரில், அங்கு வந்த டவுன் போலீசார், குடிமகன்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய பின்  சிறிது நேரத்தில் மீண்டும் வந்த அந்த கும்பலை, போலீசார் திரும்பவும் விரட்டியுள்ளனர்.

மூன்றாவது தடவையும் போலீசார் கலைந்து செல்லாத அந்த கும்பலிடம்  வந்தபோது, அந்தக் கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர் போதையில், “சும்மா சும்மா வந்து விரட்டுவது சரியல்ல. நிம்மதியாக மதுகூட குடிக்க கூடாதா? என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கோபமடைந்த போலீசார், அவரை அடித்து விரட்டி உள்ளனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின் அந்த வாலிபர், டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார். குடிபோதையில் இருந்த அவர், “என்னை அடிப்பதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அடித்ததற்கு விளக்கம் அளிக்கவில்லை என்றால் இங்கேயே சாவேன். என்னை கொன்று விடுங்கள்’’ என கூறி ஸ்டேஷன் வாசலிலேயே படுத்துவிட்டார்.

அவரை போலீசார் எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தும் அவர் கேட்கவே இல்லை. அதன்பின், அந்த வாலிபரின் தாயை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த போலீசார், மகனை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். அவருடைய தாயும் என் மகனை ஏன் அடித்தீர்கள் என கேள்வி கேட்டார். அதற்கு போலீசார்    ‘‘ உங்களது மகனை அடித்தது யார்? எந்த போலீஸ் என அடையாளம் காட்டினால், நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்றனர். நெடு நேர போராட்டத்திற்கு பின், மகனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து அவர்  புறப்பட்டு சென்றார். இந்தச் சம்பவம் கமிஷனர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர், “யாரையும் அடிக்க வேண்டாம், எச்சரிக்கை செய்து அனுப்புங்கள்”  என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *