என்னாது!… 581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டதா?…. அதிர்ந்து போன நீதிபதிகள்…. பின் வெளிவந்த பரபரப்பு உண்மைகள்…….!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா போலீஸ் நிலையத்தில் சென்ற சில வருடங்களில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 2018, 2019ம் வருடங்களில் மதுரா காவல்துறை நெடுஞ்சாலையில் நடத்திய கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சா கடத்தல்காரர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்து இருக்கின்றனர்.

இதையடுத்து கடத்தல்காரர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள சூழ்நிலையில், குற்றத்தை நிரூபித்து தண்டனையை அறிவிப்பதற்கு பறிமுதல் செய்த கஞ்சாவை சமர்ப்பிக்கவேண்டும் என நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதனைதொடர்ந்து காவல்துறையினர் கஞ்சாவின் மாதிரிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளனர். ஆனால் நீதிமன்றம், இதனை ஏற்கமுடியாது பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவையும் கோர்ட்டில் காட்டவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்பின் காவல்துறையினர் நீதிமன்றத்தில் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரா போலீஸ் நிலைய ஸ்டோர் ரூம்மில் எலித் தொல்லை அதிகம் இருப்பதாகவும், அந்த எலிகள் கிலோக் கணக்கில் இருந்த கஞ்சா அனைத்தையும் சாப்பிட்டுவிட்டதாகவும் காவல்துறையினர் கூறினர். ஆகவே  581கிலோ கஞ்சாவை ஆதாரமாக சமர்ப்பிக்க இயலவில்லை என்றும் பதில் அளித்துள்ளனர். இதை கேட்டு நீதிபதிகள் திகைத்து போயினர்.

பின் இதுகுறித்து நடத்திய தீவிர விசாரணையில், பறிமுதல் செய்த போதைப் பொருட்களை கோர்ட்டில் ஒப்படைக்க கூறியபோது, அதை வேறொருவரிடத்தில் அதிக விலைக்கு விற்றுவிட்டு எலிகளின் மீது பழிசுமத்தியது அம்பலமாகியது. இதேபோன்று கடந்த 2017ம் ஆண்டு பீகார் மாநில காவல்துறை பறிமுதல் செய்து வைத்து இருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயத்தை எலிகள் குடித்து குடித்து காலி செய்து விட்டதாக பரபரப்பு புகாரை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply