எடப்பாடி தொகுதியில்… ”முதல்வர் வேட்பாளராக” களம் காணும் ”எடப்பாடி”…!!

எடப்பாடி க. பழனிசாமி மே 12ஆம் தேதி 1954 பிறந்தார். அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார்.  இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகின்றார்.

வாழ்க்கைக் குறிப்பு:

இவர் சேலம் மாவட்டம், எடப்பாடி நெடுங்குளம் என்ற சிற்றூரை அடுத்த சிலுவம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர் கருப்ப கவுண்டர் மற்றும் தவசியம்மாள் ஆகியோர்கள் ஆவர். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வெல்ல வியாபாரம் செய்தார். இவர் இராதா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு மிதுன் என்னும் ஒரு மகன் உள்ளார்.

தமிழக முதல்வராக :

2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில், வி. கே. சசிகலா உட்பட்ட நால்வருக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்புக்கூறிய நிலையில், அதன் பின்னர் முதல்வராக பதவியேற்றார். அஇஅதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் நூறாவது நாளான மே 22, 2018 அன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் மீதும், முதலமைச்சர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் வகித்த பிற பதவிகள்:

1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியிலிருந்து அ.திமு.க. ஜெ பிரிவில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991இல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2011 ஆண்டு எடப்பாடி தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பணியாற்றினார். 2016 ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இடம்பெற்றார்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்:

இவர் 1998 ஆம் ஆண்டு நடந்த, இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார். 1999, 2004 ஆம் ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல்களில் தோல்வியுற்றார். 1999இல் மதிமுகவின் கண்ணப்பனிடமும் 2004இல் திமுகவின் சுப்புலட்சுமி செகதீசனிடமும் திருச்செங்கோடு மக்களவை தொகுதியிலேயே தோல்வியுற்றார். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *