ஊரடங்கால் கொடியிலேயே அழுகும் வெற்றிலை.. விவசாயிகள் வேதனை..!!

வெற்றிலையை வெளியூர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாட்டத்தை தமிழக அரசு போக்குமா.?

ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து தடை பட்டதாலும் கடைகள் மூடியதாழும் வெற்றிலை கொடியிலேயே அழுகி வருகிறது.  இதனால் வெற்றிலை போல் அதை பயிரிட்ட விவசாயிகள் வாடி போயுள்ளனர். அரசு இவர்களுக்கு கை கொடுக்குமா, தமிழகத்தில் எல்லா சுபகாரியங்களும் வெற்றிலையுடன் தான் தொடங்கும்.

அப்படிப்பட்ட வெற்றிலையை ஊரடங்கு உத்தரவால் வெளியூர்களுக்குச் எடுத்து செல்ல முடியாமல் பழுத்து கொடியிலேயே வீணாகி வருகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான் வெற்றிலைக்கு மிகவும் பெயர் பெற்றது. சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி, பாலகிருஷ்ணன்பட்டி, இஞ்சிப்பட்டி  போன்ற உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 150 ஏக்கருக்கு மேல் வெற்றிலை விவசாயம் நடைபெற்று வருகின்றது.

இப்பகுதியில் விளையும் வெற்றிலை தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட பல்வேறு தொழில்களில் வெற்றிலை விவசாயமும் ஒன்றாகும். எந்த போக்குவரத்தும் இல்லாததால் வெற்றிலையை பறித்து வெளியூர்களுக்கு அனுப்ப முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

வெற்றிலைப் பறிக்கப்படாமல் கொடியிலேயே விடுவதால் நோய் தாக்குதலுக்கு ஆளாகி அழுகும் நிலைக்கு சென்று விட்டது. எனவே அரசு உடனடியாக தலையிட்டு  இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கருப்பட்டி பகுதியிலிருந்து நாள்தோறும் ஆயிரம் கிலோ வெற்றிலை ஏற்றுமதி செய்யப்படும்.

ஆனால் தற்பொழுது வெற்றிலை தொழில் முற்றிலும் முடங்கி உள்ளதால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வெற்றிலை பறிக்கும் கூலி தொழிலாளர்களுக்கும் ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள். அரசு தலையிட்டு வெற்றிலையும் அத்தியாவசிய பொருளாக கருதி, வெளியூர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *