உ.பி-ல் 144 தடையை மீறியவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையால் சர்ச்சை: மன்னிப்பு கேட்ட மாவட்ட எஸ்எஸ்பி

உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சொந்த ஊருக்கு நடைபாதையாக சென்ற நபர்களுக்கு காவல்துறை அளித்த தண்டனையால் சர்ச்சை கிளம்பியது. நாடு முழுவதும் பிரதமர் வேண்டுகோளின் அடிப்படையில் 144 தடை உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேபோல பல்வேறு முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு விதிகளை மீறி வெளியே வரும் நபர்களுக்கு தோப்பு கரணம் உள்ளிட்ட நூதன தண்டனையை காவல்துறை அதிகாரிகள் வழங்கி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தான் நேற்று, மேற்கு உத்தரப்பிரதேசத்தின் புடான் மாவட்டத்தில் சில இளைஞர்கள் குழுவாக நடந்து சென்றுள்ளனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்த போது, ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்களது சொந்த வீட்டிற்கு திருப்புவதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும், விதியை மீறி வெளியே வந்ததால் காவல்துறை அதிகாரிகள் இளைஞர்களுக்கு தண்டனையை கொடுத்துள்ளனர்.

வெயில் தாக்கம் ஒருபுறம் இருக்க, அவர்கள் கொண்டு வந்த பையை முதுகில் மாட்டியவாறு ஹாப் அண்ட் கிரவ்ல் ( hop and crawl ) செய்துள்ளனர். இந்த வீடியோ வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த புடான் எஸ்எஸ்பி அசோக் குமார் திரிபாதி, குறிப்பிட்ட காவல்துறை அதிகாரியின் இந்த செயலுக்கு தான் வருந்துவதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார். மேலும் சம்பந்தப்பட்ட போலீசாரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *