உள்ளாட்சித் தேர்தல்…. இடைக்கால தடைக்கு நோ சொன்ன நீதிபதிகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருவதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்றும், தேர்தலை தள்ளி வைக்க கோரியும், தமிழக அரசின் ஓய்வு பெற்ற மருத்துவர் நக்கீரன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ,நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொரோனா தொற்று போன்ற பேரிடர் காலத்தில் தேர்தலை நடத்தினால் தொற்று பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் என்றும், தற்போது 17 சதவீதம் தொற்று அதிகரித்துள்ளதாகவும், நாளுக்குநாள் ஐசியூவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள் ஜனவரி 27-ம் தேதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பில், மாநிலத்திலுள்ள நிலையை பொருத்து தேர்தல் பற்றிய வழக்கை விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் 2021-ஆம் ஆண்டு அனுமதி வழங்கியுள்ளது என்று விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் 4 மாதத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதாக உத்தரவாதம் அளித்திருப்பதாகவும், அந்த அவகாசமானது ஜனவரி 27-ம் தேதியுடன் முடிவடைவதாகவாம் தெரிவித்தார். மேலும் தேர்தலை தொற்று பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுடன் நடத்துவது பற்றி டிசம்பர் மாதம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டதோ அதே நடைமுறை நகர்ப்புற தேர்தலிலும் கடைபிடிக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அப்போது மற்றொரு மனுதாரர் தரப்பிலிருந்து ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் தற்போதுள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார். இதையடுத்து காணொளி காட்சி விசாரணையின் போது தொழில் நுட்பப் பிரச்சினைகள் வருவதால், இந்த வழக்கை நேரடியாக விசாரணை செய்ய வேண்டும் என்று மருத்துவர் நக்கீரன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார். மேலும் இந்த வழக்கு நேரடியாக திங்கட்கிழமை அன்று விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *