
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதும் யாதவ் மீது அவரது மனைவி போலீசில் பரபரப்பான புகாரை பதிவு செய்துள்ளார். அந்த புகாரில், தங்கள் இருவரும் அந்தரங்கமாக இருந்தபோது, தன்னிடம் கூறாமல் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்ததோடு, அதை ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் பதிவிட்டு, பின்னர் தனது சகோதரனுக்கும் மற்றும் பிற கிராமவாசிகளுக்கும் பகிர்ந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து, மிர்சாபூர் போலீசார் பிரதும் யாதவ் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 67-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பிரதும் யாதவ் அலஹாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். விசாரணையின் போது, பிரதும் யாதவ் சார்பில் வக்கீல், “புகார் அளித்த பெண் இவரது சட்டபூர்வமான மனைவி; எனவே IT Act 67-வது பிரிவு பொருந்தாது” என வாதிட்டார். ஆனால் கூடுதல் அரசு வழக்கறிஞர், “திருமணமான நிலையில் இருந்தாலும், மனைவியின் அனுமதியின்றி அந்தரங்க வீடியோவை பதிவு செய்து, மற்றவர்களுடன் பகிரும் உரிமை கணவருக்கு இல்லை” என வலியுறுத்தினார்.
இந்த வழக்கில் நீதிபதி வினோத் திவாகர் தீர்ப்பு வழங்கியுள்ளார். தனது தீர்ப்பில், “மனைவிக்கு கணவர் உரிமையாளர் ஆக முடியாது. அவரும் தனிப்பட்ட உரிமைகள் மற்றும் விருப்பங்கள் கொண்ட ஒரு தனிநபர். திருமண பந்தத்தின் புனிதத்தன்மையை மதிக்க வேண்டியது கணவரின் கடமையாகும். மனைவியின் உடல் சுதந்திரத்தையும், தனியுரிமையையும் மதிப்பது சட்ட மற்றும் தார்மீக பொறுப்பாகும்” எனக் கூறிய நீதிபதி, பிரதும் யாதவ் மீதான குற்றவியல் வழக்கை ரத்து செய்ய மறுத்துள்ளார். இந்த தீர்ப்பு, திருமண உறவில் தனிமனித உரிமைகள் பற்றிய முக்கியத்துவத்தைக் மீண்டும் வலியுறுத்துகிறது.