மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள போரிவலி கிழக்கில் ஒரு இளம்பெண்(26) வசித்து வருகிறார். இவர் மருந்து நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் தேதி இந்தப் பெண்ணை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர்கள் தங்களை டெல்லி போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். அதன் பிறகு பணம் மோசடி குற்றச்சாட்டில் இளம் பெண்ணின் பெயர் இருப்பதாக கூறியுள்ளனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் ஏற்கனவே சிறையில் இருக்கும் நிலையில் அவரது வழக்கு தொடர்பான விசாரணை நடக்கும் போது அந்த பெண்ணின் பெயரும் அடிபடுவதாக கூறியுள்ளனர்.
இதனால் என்ன செய்வது என்று அறியாது அந்த பெண் அச்சத்தில் இருந்தார். அதனை பயன்படுத்திய மோசடி நபர்கள் உங்களை கைது செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். வீடியோ காலில் வந்த மோசடிக்காரர்கள் டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாகவும், தங்கள் அனுமதி இல்லாமல் யாரிடமும் பேசக்கூடாது என மிரட்டி உள்ளனர். ஒரு கட்டத்தில் மோசடிக்காரர்கள் அந்த பெண்ணை ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்க சொல்லி உள்ளனர். அதன் பிறகு அந்த பெண் ஹோட்டலுக்கு வந்தவுடன் அவரை மிரட்டி உள்ளனர்.
வங்கி கணக்குகளை சரி பார்க்க வேண்டும் என கூறி அந்த பெண்ணிடம் இருந்து 1.78 லட்சத்தை மிரட்டி வாங்கியுள்ளனர். அதன் பிறகு முழுமையாக செக் செய்ய வேண்டும் எனக் கூறி அவரது ஆடைகளை கட்டாயப்படுத்தி கழற்ற சொல்லியுள்ளனர். அதற்கு பயந்து அந்த பெண்ணும் வேறு வழியில்லாமல் ஆடைகளை கழற்றி உள்ளார். பணத்தையும் மோசடிக்காரர்களுக்கு மாற்றி உள்ளார். அந்த பெண்ணிடம் இருந்து மேலும் பணத்தை பறிக்கும் வகையில் அவர்கள் பேசியுள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் மோசடி செய்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.