தொகுதி பங்கிட்டின்படி காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள மொத்தம் 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் போட்டி என சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, வாரணாசி, அமேதி, ரேபரேலி, காசியாபாத், கான்பூர் உள்பட 17 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி தெரிவித்துள்ளது.

80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேசத்தில் இதுவரை 31 வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.  சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரியங்கா காந்தி பேசிய நிலையில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.. முன்னதாக உத்தரபிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது என அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்.

அகிலேஷ் யாதவ் கூறியதாவது, ‘காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக செய்த தில்லுமுல்லு போல் இதுவரை யாரும் செய்ததில்லை. பாஜக செய்த தில்லுமுல்லு செயல்களை உச்சநீதிமன்றமே உறுதி செய்துள்ளது’ என தெரிவித்தார்.