அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அமைதி காத்து வந்தனர். அதன்பிறகு தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் வெளிப்படையாக தெரிய இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக பிரிந்து செயல்பட தொடங்கியுள்ளனர். இபிஎஸ் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் தான் என்றும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் என்றும் ஓபிஎஸ் கூறி வரும் நிலையில் பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது.
அதன் பிறகு தன்னை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஓ. பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதன்படி இபிஎஸ் தரப்பில் கே.எஸ் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக ஒருவேளை வேட்பாளரை அறிவித்தால் தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொள்வோம் என்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளரை அறிவித்துள்ளதால் இரட்டை இலை சின்னத்தை கேட்டு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தேர்தல் ஆணையத்திற்கு தனி தனியாக செல்வார்கள். மேலும் இதன் காரணமாக தற்போது அதிமுகவில் இரட்டை இலை சின்னம் முடக்கப்ப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.