ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு… கிறிஸ்தவ ஆலயங்களில்… திரளானோர் சிறப்பு பிரார்த்தனை..!!

நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவை ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்துவர்கள் கொண்டாடினர். இதனை முன்னிட்டு திருப்பலி நள்ளிரவில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நடைபெற்றது. சிவகங்கை மறை மாவட்ட நிர்வாகி அருட்தந்தை பாக்கியநாதன் தலைமையில் புனித அலங்கார மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. சிவகங்கை மறை மாவட்ட பொருளாளர் அருட்தந்தை சந்தியாகு சிவகங்கை ஆயர் இல்ல வளாகத்தில் திருப்பலியை நிறைவேற்றினர்.

பங்குத்தந்தை சூசை ஆரோக்கியம் தலைமையில் காளையார் கோவில் புனித அருளானந்தர் ஆலயத்தில் அருட்தந்தையர்கள் ரிச்சர்ட், வளன் ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றினர். பங்குத்தந்தை தைரியநாதன் தலைமையில் ஆண்டிச்சி ஊரணி புனித அடைக்கல மாதா ஆலயத்தில் அருட்தந்தை ஸ்டானி இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர். பங்குதந்தை குழந்தைநாதன், சூசையப்பர் பட்டினம் புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலியை நிறைவேற்றினர். அருட்தந்தையர்கள் ஜார்ஜ், லூர்து, மார்ட்டின், பிரான்சிஸ் ஆகியோர் பள்ளித்தம்பம் புனித மூவரசர்கள் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றினர்.

உயிர்ப்பு ஞாயிறு சிறப்பு திருப்பலி காரைக்குடி தூய சகாய மாதா ஆலயத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பங்குத்தந்தை எட்வின்ராயன் இரவு 11 மணி அளவில் மெழுகுவர்த்தியை பற்றவைத்து அதன்பின் அதை உயர்த்தி பிடித்து மூன்று முறை கிறிஸ்துவின் ஒளி இது என்று பாடினார். அதன் பின் திருப்பலியை ஆலய முகப்பில் இருந்த இடம் நோக்கி வந்து நிறைவேற்றினர். கும்பகோணம் மறைமாவட்டத்தில் இருந்து வந்திருந்த அருட்திரு பிரான்சிஸ், பங்குத்தந்தை யோகி இணைந்து உதவி பங்குச்சந்தை ஜானி மரிவளவன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இதில் கிறிஸ்துவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.