ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்..
சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி, சி.வி. சண்முகம், கே.சி கருப்பண்ணன் உள்ளிட்ட 6 அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் யார் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது.
முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடும் என தாமாகாவின் வாசன் அறிவித்திருந்தார். இதையொட்டி சேலத்தில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த தொகுதியில் யாரை வேட்பாளராக காலம் பெறலாம் என்ற கோணத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது இந்த ஆலோசனையை தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அடுத்த கட்ட ஆலோசனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவேரா மறைவை தொடர்ந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.