ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஈரோடு பெரியார் நகரில் கிழக்கு காங்கிரஸ் வேட்பாளருக்கான தேர்தல் பிரச்சாரத்தை வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமியுடன் இணைந்து அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தொகுதியை காங்கிரசுக்கு முதல்வர் ஒதுக்கி உள்ளார். அந்த கட்சியின் வெற்றிக்காக நாங்கள் பாடுபட இருக்கின்றோம் எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து சொத்து வரி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், அவர்கள் அரசை விமர்சிப்பது இயற்கையானது. ஆனால் உண்மையில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது மிகவும் குறைந்த அளவு வரி உயர்வு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதனை மக்களும் ஏற்றுக்கொண்டனர். தற்போது கடந்த 18 மாதங்களில் எங்களின் சாதனை அடிப்படையில் நாங்கள் வாக்குகளை கோருகிறோம் என தெரிவித்துள்ளார்.