ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா கடந்த ஜனவரி நான்காம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தி.மு.க கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் மீண்டும் போட்டியிடும் என அந்த கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கே.எஸ் அழகிரி கூறியதாவது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் தான் போட்டியிடும். இன்று மாலை கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேச இருக்கின்றேன். அனைத்து கூட்டணி கட்சிகளும் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறியுள்ளார். தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் இது குறித்து இதுவரை எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார்.