முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில், எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வாயிலாக நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் விவசாய பயனாளர்களில் 50000 -வது பயனாளி உட்பட 5 நபர்களுக்கு மின் இணைப்பு ஆணைகளை வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தி துறை கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப இயக்குனர் மா.சிவலிங்க ராஜன் போன்றோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வு மேம்படவும், உணவு உற்பத்தியை பெருக்கிடவும் இந்த அரசு பொறுப்பேற்றவுடன் இதற்கு முன் எந்த அரசும் செய்திடாத ஒரு சாதனையாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு ஒரே ஆண்டில் இலவச மின்சாரம் என அறிவித்துள்ளது. மேலும் அறிவித்த ஆறு மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதேபோல் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் மக்களுக்கான இந்த அரசு 2022 -2023 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பசுமை புரட்சிக்கு வித்திடும் விதமாக எரிசக்தி துறை மானிய கோரிக்கையில் இந்த நிதியாண்டிலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

கடந்த 11.11.2022 அன்று கரூர் மாவட்டத்தில் உள்ள அருவங்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது. 100 நாட்களுக்குள் இந்தத் திட்டம் முடிக்கப்படும் என அன்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மொத்தம் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகளை வழங்கி இந்த அரசு புதிய சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பாசன பரப்பு விரிவடைந்து விளைச்சல் அதிகரித்து உற்பத்தியும் பெருகி கொண்டிருக்கிறது.