தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து வானிலை பனிமூட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனியை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியீட்டுள்ள தகவலில் கூறபட்டுள்ளதாவது, லேசான பனிமூட்டம் வறண்ட வானிலை, பலத்த காற்று, மீனவர்களுக்கு எச்சரிக்கை போன்றவை முக்கிய அம்சங்களாக இடம் பெற்றுள்ளது. ஜனவரி 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இன்றைய தினம் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையிலிருந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் வெளியீட்டுள்ள பதிவில், இரவு நேர வெப்பநிலை தொடர்ச்சியாக குறைந்து கொண்டே செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை நாளில் பனி அதிகமாக இருக்கும். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களில் ஜனவரி மாதத்தில் 20 டிகிரி செல்சியஸ் க்கு கீழ் குறைந்ததில்லை. ஆனால் இந்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது 18 டிகிரிக்கு கீழ் வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது. மேலும் வேலூரில் 14 டிகிரி செல்சியஸ் என்ற நிலைக்கு கூட செல்லலாம். அடுத்த சில நாட்களில் இதற்கான அறிகுறிகளை தெளிவாக காண முடியும் என தெரிவித்துள்ளார். அதனால் இனி வரும் நாட்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதற்கு தகுந்தாற்போல் மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது என கூறியுள்ளார்.