இனி ஒரு வாரம் ஆனாலும் காய்கறி வாடாம அப்படியே இருக்கும்…. இதோ இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க….!!!!

நாம் உண்ணும் உணவு முதல் படுக்கையறை வரை அனைத்துமே சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் எந்த நோய்க் கிருமிகளும் நம்மை அண்டாது. வீட்டில் காய்கறிகளை எப்போதும் பிரஷ்ஷாக வைத்திருக்க முடியவில்லை என்ற இல்லத்தரசிகள் புலம்புவது வழக்கம். இனி இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க. வீட்டில் பிரிட்ஜ் இருந்தால் சிலர் அனைத்து காய்கறிகளையும் அதில் வைத்து விடுவர். ஆனால் சில காய்கறிகளை மட்டுமே பிரிட்ஜில் வைக்க முடியும். மற்றதை வெளியில் தான் வைக்க வேண்டும்.

அதன்படி கேரட் எப்போதுமே ஃப்ரெஷ்ஷாக இருக்கும். இருந்தாலும் ஒரு வாரம் ஆனதும் அதன் தோள்கள் வளவள தன்மையோடு வாடியபடி மாறிவிடும். இதனை தவிர்க்க கேரட்டை அகன்ற பாத்திரத்தில் தண்ணீரில் வைக்க வேண்டும். அப்படி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பாத்திரத்தில் தண்ணீரை மாற்றி வைத்தால் கேரட் 10 நாட்கள் வரை வாடாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.

பச்சை மிளகாயை அதன் காம்பை நீக்கி வைத்தால் அப்படியே இருக்கும். இல்லையென்றால் சீக்கிரம் வாடி விடும். எனவே பச்சை மிளகாயை காம்பு நீக்கி குளிர்ச்சியான இடத்தில் வைத்தால் 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். அதை தனியாக ஒரு டப்பாவில் அல்லது பிளாஸ்டிக் கவரில் போட்டு வைக்கலாம்.

முருங்கைக்காயை பொருத்தவரை அப்படியே நீண்ட வாக்கில் வைத்தால் அது விரைவில் தளர்ந்து விடும். அதனால் அதனைத் துண்டு துண்டாக நறுக்கி வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் அப்படியே இருக்கும். முருங்கக்காய் போலவே பாகற்காயை இரண்டாக வெட்டி மெல்லிய துணியில் சுருட்டி வைக்க வேண்டும். இல்லையென்றால் அது விரைவில் பழுத்து விடும்.

அனைத்து உணவிற்கும் முக்கியமானது இஞ்சி. ஆனால் இஞ்சியை ஃப்ரெஷ்ஷாக வாங்கி வைத்தால் அதன் தோல் சுருங்கி கருத்துவிடும். அதனால் வீட்டில் சிறிய அகலமான பாட்டில் இருந்தால் அதில் மண்ணை நிரப்பி,ஈரமாக்கி அதில் இஞ்சியை புதைத்து வைத்து விட்டால் தேவையான போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாழைக்காயை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது. எப்போதும் குளிர குளிர நீரில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை பசுமையாக அப்படியே இருக்கும்.

பொதுவாக வெங்காயத்தை கூடையில் போட்டு வைப்பது வழக்கம். ஆனால் வெங்காயத்தை தரையில் பரப்பி வைக்க வேண்டும். அப்படி செய்தால் நல்ல காய்ந்த வெங்காயமாக இருந்தால் 30 நாட்கள் வரை தாங்கும். அது சற்று ஈரப்பதமாக இருந்தால் 15 நாட்கள் வரை அப்படியே இருக்கும்.

முட்டைக்கோஸ் வாங்கிய பிறகு முதல் தோலை உரித்து விட்டு ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். முள்ளங்கி வாங்கும்போது முள்ளங்கி கீரையோடு இருந்தால் கீரையைத் தனியாக பிரித்து பிறகு முள்ளங்கியை தனியாக வைக்க வேண்டும். அதனைப்போலவே பீட்ரூட் இலைகளை தனியே எடுத்து வைக்கலாம். நூக்கள் இயல்பாக 4 நாட்கள் வரை தாங்கும். எல்லா காய்கறிகளையும் தனித்தனியாக கவரில் போட்டு வைக்க வேண்டும்.

அதனைப் போல கிழங்குகள் உருளை, சேனைக்கிழங்கு மற்றும் பிடி கருணை கிழங்கு என எந்த கிழங்காக இருந்தாலும் அதனை முதலில் மண் போக சுத்தம் செய்த பிறகு காற்றாட வெளியில் வைத்தால் அவை 20 நாட்கள் வரை அப்படியே இருக்கும்.

தக்காளியை எப்போதும் காய் பதத்தில் பார்த்து வாங்க வேண்டும். அவற்றை அப்படியே பிரிட்ஜில் வைத்தால் விரைவில் பழுக்காது. அதனால் லேசாக பழுக்கும் வரை வெளியில் வைத்திருந்து அதன் பிறகு எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

இவற்றைத் தவிர வெண்டைக்காய், பீன்ஸ், கொத்தவரங்காய், கோவக்காய், புடலங்காய், சுரக்காய், பூசணிக்காய், குடைமிளகாய், பீர்க்கங்காய், காலிஃப்ளவர் மற்றும் கீரை வகைகள் அதிக நாட்கள் வரை வைக்க வேண்டாம். ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு நாட்களுக்கு மேல் வைத்து பயன்படுத்த கூடாது. அதுவே வெளியில் இருந்தால் வாங்கிய அன்றோ அல்லது அடுத்த நாளோ சமைத்து விட வேண்டும்.

காய்கறிகளை சமைப்பதற்கு முன்பு ஓடும் நீரில் கழுவிய பிறகு பயன்படுத்த வேண்டும். காய்கறிகளின் காம்பை முழுவதுமாக நீக்கிய பிறகே சமைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக கத்தரிக்காய் மற்றும் கீரைகளை பொடியாக நறுக்கி நீரில் போட்டு விட்டு மேலாக எடுத்தால் கீரையில் இருக்கும் மண் அடியில் தங்கிவிடும்.

ஃப்ரிட்ஜில் காய்கறிகளை வைக்காமல் இருந்தால் மணலை அகலமாக பரப்பி அதன் மீது மண் பானையை வைக்க வேண்டும். அந்த மணல் எப்போதும் ஈரமாகவே இருக்கும். அதோடு காய்கறிகளை புதிய மண்பானையில் வைத்தால் ஒரு வாரம் வரை தாங்கும். காய்கறிகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அதனை திட்டமிட்டு வாங்குவதோடு பயன்படுத்தும் முறையையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் காய்கறிகளை பதபடுத்துவது சிரமம் என்பதால் காய்கறிகளை அவ்வப்போது வாங்கி பயன்படுத்துவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *