பல்வேறு மாநில அரசுகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இந்திய உணவு கழகத்தின் கையிருப்பிலுள்ள அரசி மற்றும் கோதுமையை மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படாது என்று முடிவுசெய்துள்ளது. ஏனெனில் இடைத்தரகர்களால் ஏற்படும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவே இம்முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கர்நாடகா மாநிலம் மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்துள்ள நிலையில், அதை முடக்க உள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த அறிவிப்பால் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராத மக்களுக்கு இலவச அரிசி வழங்கி வரும் தமிழகம், கேரளா, கர்நாடகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் பாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது, மத்திய அரசிடம் ஆலோசிக்காமல் மாநில அரசுகள் இலவச அரிசி திட்டத்தை அறிவிக்கிறது. மத்திய அரசானது இருப்புகளை வைத்துதான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் இயற்கை பேரிடரை சந்திக்கும் மாநிலங்களை தவிர்த்து பிற மாநில அரசுகளுக்கு திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் கோதுமை விற்பனை இல்லை என மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது என தெரிவித்துள்ளார்.