நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. அந்த மாநாடு முடிந்ததிலிருந்து தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. வருகிற 2026-ஆம் ஆண்டு தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது. சமீப காலமாக விஜயின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் கட்சி பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் நிவாரணம் வழங்கினார்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அவர் அறிக்கை வெளியிட்டார். அவர் கூறியிருப்பதாவது, மாவட்ட நிர்வாகிகள், தலைவர்கள், அணி தலைவர்கள் கவனத்திற்கு… தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி இனி வரும் காலகட்டங்களில் தங்கள் மாவட்டத்தில் நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டம், நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளிலும் கீழ்க்கண்ட வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக கொள்கை பாடல், மூன்றாவதாக உறுதிமொழி ஆகியவை அந்த நிகழ்ச்சிகளில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். நிகழ்ச்சியின் இறுதியில் கழக கொடி பாடல் ஒலிக்க வேண்டும். இதனை கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக தங்கள் மாவட்டம் சார்பில் நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டங்கள், செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் பொது குழு கூட்டங்கள் ஆகியவற்றை கட்சி தலைமையிடம் அனுமதி பெற்ற பிறகு நடத்த வேண்டும் என தலைவர் விஜய் கூறியதாக பொதுச் செயலாளர் என் ஆனந்த் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.