நம் அனைவரின் வாழ்க்கையிலும் வங்கி முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதாவது பணத்தை சேமிப்பதற்கு, கடன் வாங்குவதற்கு மற்றும் பணம் தொடர்பான நிறைய விஷயங்களுக்கு வங்கிகள் முக்கியமானதாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதே வங்கிகளின் முதல் கடமையாகும். மேலும் வங்கிகள் தொடர்ந்து இயங்குவது வாடிக்கையாளர்களை பொருத்தும் அதன் நிதிச் சூழலை பொருத்தும் அமைகிறது. அதிலும் முக்கியமாக மத்திய அரசு வங்கிகளின் சட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு செயல்படுவது வங்கிகளின் கடமையாகும். ரிசர்வ் வங்கி வகுத்துள்ள பாதையில் பயணிப்பதே இவற்றின் முக்கிய பொறுப்பாகும்.
ஒவ்வொரு வருடமும் ரிசர்வ் வங்கி வகுத்துள்ள அமைப்பு முறைக்கு உட்பட்டு செயல்படும் வங்கிகளை தரம் பிரித்து அதுக்கு ஏற்ப பட்டியலில் இடப்பட்டு அதற்கான விவரங்கள் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் 2022 -ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் அமைப்பு ரீதியில் முக்கிய வங்கிகளுக்கான பட்டியலில் ஐசிஐசிஐ பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஹெச்டிஎஃப்சி பேங்க் போன்ற 3 வங்கிகள் மட்டுமே இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலானது 2022 மார்ச் 31 நிலவரப்படி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நிதிநிலை தன்மைக்கு இந்த மூன்று வங்கிகளும் தூண்களாக இருக்கிறது என ரிசர்வ் வங்கியின் இந்த பட்டியல் தெரிவிக்கிறது.
இதனையடுத்து 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ ஆகிய இரண்டு வங்கிகள் மட்டுமே இந்த பட்டியலில் இருந்தது. இதனைத் தொடர்ந்து 2017 -ஆம் ஆண்டில் ஹெச்டிஎஃப்சி வங்கியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு இந்த வங்கி பட்டியலில் உள்ள வங்கிகளை கையாள்வதற்காக தனித்திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து கண்காணிக்கப்படுகிறது.
மேலும் வங்கிகளுக்கு நிதி உதவி தேவைப்பட்டால் அதை அரசு தரப்பில் இருந்து ஏற்பாடு செய்து கொடுப்பது உள்ளிட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மூன்று வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் பட்டியலில் தொடர்ந்து நீடிப்பதற்கான காரணங்களாக வாடிக்கையாளர் சேவையில் முன்னிலை வகிப்பது மட்டுமில்லாமல் ரிசர்வ் வங்கியின் சட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு வங்கி அமைப்பில் சரியாக இயங்கிக் கொண்டிருப்பதாகும்.