தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு தற்போது மத்திய அரசுதான் ரத்து செய்ய முடியும் என்று கூறி தமிழக மக்களை ஏமாற்றி விட்டார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார். ஆட்சிக்கு வருவதற்காக எந்தவித பொய்யையும் சொல்லும் அளவிற்கு ஆட்சியாளர்கள் இறங்கி விட்டதாகவும் இனியும் தமிழக மக்கள் அவர்களுடைய பொய்யை நம்ப மாட்டார்கள் என்றும் கூறியிருந்தார். இதற்கு தற்போது திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, மாநில அரசுக்கு நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் கிடையாது.

கல்வி சம்பந்தமான அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுக்கு பொதுவாக இருக்கும் நிலையில் மாநில அரசை மத்திய அரசு புறம் தள்ளி வருகிறது. திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்த நிலையில் இருமுறை சட்டசபையில் மசோதா நிறைவேற்றி அனுப்பிய நிலையிலும் அதனை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. மத்திய அரசுதான் நீட் தேர்வை ரத்து செய்ய முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிந்துள்ளாரா என்பது தெரியவில்லை. மேலும் தமிழக அரசை பொருத்தவரை கடமையை செய்துள்ளதால் மத்திய அரசுக்கு எதிராகத்தான் விஜய் குரல் எழுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.