இந்தி திணிப்பு….. “87 வயது திமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை”….. இடியென வந்த செய்தியால் கலங்கி நிற்கும் முதல்வர் ஸ்டாலின்… ஆழ்ந்த இரங்கல்.!!

சேலம் மாவட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக 87 வயது முதியவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், அவருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்..

சேலம் மேட்டூர் அடுத்த தாழையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் (வயது 85) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. மேட்டூர் அடுத்துள்ள பி.என் பட்டி பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். இவர் நங்கவள்ளி முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளராக பதவி வகித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஜானகி என்ற மனைவியும், மணி, ரத்தினவேல் என 2 மகன்களும் உள்ளனர்.. இவர் திமுக மீது கொண்ட பற்று காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றுள்ளார்..

மேலும் திமுக ஆட்சியின்போது பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கையால் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். இந்த நிலையில் மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் இந்தி திணிப்பை கையில் எடுத்துள்ளதாக திமுக கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கவேல் பி.என் பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 4ஆவது வார்டு பகுதியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்திற்கு இன்று 11 மணி அளவில் கேனில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு வந்து உடல் மேல் ஊற்றி தீக்குளித்து அதே இடத்தில் உயிரிழந்தார்..

மேலும் தீ பற்ற வைக்கும் முன்பு ஒரு வெள்ளை தாளில் வாசகம் எழுதியுள்ளார்.. அதில் மோடி அரசே! மத்திய அரசே! அவசரம் வேண்டாம். தாய்மொழி தமிழ் இருக்க, இந்தி கோமாளி எதற்கு.. இந்தி மாணவ மாணவிகளின் வாழ்க்கையை பாதிக்கும். இந்தி ஒழிக! இந்தி ஒழிக! என்று வாசகத்தை எழுதியுள்ளார்.. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் “கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தியில் இடியென வந்த செய்தியால் கலங்கித் தவிக்கிறேன். சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் திரு. தங்கவேல் அவர்கள், இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தன்னுடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் என்றறிந்து வேதனையில் உழல்கிறேன்.

இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்துள்ள தாழையூர் தங்கவேலுவுக்கு வீரவணக்கம்! இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல்ரீதியாக – ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம்!  ஏற்கனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம். இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது! போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

பன்முகத்தன்மைக் கொண்ட அழகிய நாட்டைக் குறுகிய மனப்பான்மையால் குலைத்திட வேண்டாம். ‘இந்தியைத் திணிக்காதே’ எனக் காலங்காலமாய் நாம் உரத்துச் சொல்லும் முழக்கம் ஆதிக்க மனப்பான்மையில் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செவிகளுக்கும் இதயத்துக்கும் எட்டும்வரை நாம் ஓயப்போவதில்லை. தாழையூர் தங்கவேலு அவர்களது குடும்பத்துக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்..