திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஸ்ரீராமபுரம் ஊராட்சியில் பூத்தாம்பட்டி ஏடி காலனி உள்ளது. இந்த பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்காக தனியாக ஒரு சுடுகாடு உள்ளது. இந்நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் உடல்நலக்குறைவினால் இறந்த நிலையில் அவரை புதைப்பதற்காக சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு சுமார் 10 அடி ஆழத்தில் மண் அள்ளப்பட்டிருப்பது தெரியவந்த நிலையில், 6 சமாதிகள் காணாமல் போனது தெரிய வந்தது.

அதோடு அங்கு புதைக்கப்பட்ட 6 பிணங்களையும் காணவில்லை. அதாவது நள்ளிரவு நேரத்தில் அங்கு சென்ற மர்ம நபர்கள் மண்ணள்ளியுள்ளனர். அவர்கள் மண்ணோடு சேர்த்து பிணங்களையும் அள்ளி சென்றது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு  நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி கொடுத்த நிலையில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.