திருச்சியில் அரசியல் அமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லைகளும் எனும் தலைப்பில் ஒரு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மக்களால் இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் பேரவையில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டும் தான் ஆளுநரின் வேலை. அரசு இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் அப்படியே வைத்திருப்பது சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு. பேரவையில் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை படிப்பது மட்டும்தான் ஆளுநரின் வேலை.
அதை விட்டுவிட்டு அவற்றிலிருந்து சிலவற்றை நீக்கியோ தானாக சில வார்த்தைகளை பேசுவதற்கு ஆளுநருக்கு உரிமை கிடையாது. ஏனெனில் ஆளுநர் என்பவர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் மட்டுமே. ஆளுநரின் உரையை நீக்கி முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் சரியானது தான். அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள தமிழ்நாடு என்ற வார்த்தையை நீக்கி பேச வேண்டும் என்று சொல்வதற்கு ஆளுநருக்கு உரிமை கிடையாது என்று கூறினார். மேலும் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.