தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று கூறினார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு சென்னையில் வைத்து கமல்ஹாசன் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தோடு அவர்களுக்கு விருந்தும் கொடுத்தார். அதன் பிறகு கமல்ஹாசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு என்ற பெயர் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகே கிடைத்துள்ளது.

இதை மாற்றுங்கள் என்று சொல்வதற்கு ஆளுநர் யார். ரவி அவருடைய பெயரை புவி என்று மாற்ற சொன்னால் மாற்றிக் கொள்வாரா? என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகு பாஜக மதவாத அரசியலை பரப்புகிறது என்றும், அவர்கள் மதத்துக்காகவே அரசியல் செய்கிறார்கள் என்றும் கூறினார். அதோடு பாஜகவின் மதவாதத்தை தடுப்பதற்காகவும் இந்தியாவை ஒற்றுமை படுத்துவதற்காகவும் தான் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார் என்றும் கூறினார். மேலும் கமல்ஹாசன் தன்னுடைய twitter பக்கத்தில் தமிழ்நாடு வாழ்க என்பதை தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளில் ட்வீட்‌ பதிவு போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.