மார்ச் 5-ம் தேதி அணிவகுப்பிற்கு அனுமதி தர கோரி டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தமிழக அரசு சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி தரவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய திடலில் நடத்த வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம் அப்படி விண்ணப்பித்தால் சட்டப்படி பரிசீலனை செய்து முடிவெடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத விதமாக அரசு செயல்பட வேண்டும். கடும் கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கலாம் என நீதிமன்றம் குறிப்பிட்டு இருந்தது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று ஆர்எஸ்எஸ் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. மேலும் பொள்ளாச்சி, கோவை உட்பட ஆறு இடங்களில் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய மூன்று இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தலாம். ஆறு இடங்களில் மட்டும் இயல்புநிலை திரும்பும் வரை ஆர்.எஸ்.எஸ் காத்திருக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.