ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்… 7 பேர் பலி; 6 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!!!!!

ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து அங்கு ஐ.எஸ் கோரசான் பயங்கரவாத அமைப்பின் கை ஓங்கி வருகிறது. அவர்கள்  தொடர்ச்சியாக  கல்வி நிலையங்கள் மற்றும் மசூதிகளை குறி வைத்து அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் பால்க் மாகாணத்தில் மசார்-இ-ஷரிப் நகரில் பெட்ரோலிய இயக்குனகரத்தின் ஊழியர்கள் தங்களது அலுவலகத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய வாகனம் ஒன்றை நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனையடுத்து அந்த வாகனம் இருந்த பகுதிக்கு பேருந்து வந்தவுடன் பயங்கரவாதிகள் அதிலிருந்து குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியே அதிர்ந்தது. மேலும் குண்டுவெடிப்பில் அரசு ஊழியர்கள் சென்ற பேருந்து உட்பட பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த பயங்கர சம்பவத்தில் அரசு ஊழியர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.