சென்னையில் ஆன்லைன் கடன் செயலியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாங்காடு பகுதியில் ஆன்லைன் லோன் செயலி மூலம் கடன் பெற்ற சீனிவாசன் என்ற 31 வயது இளைஞருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், 8 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சீனிவாசன் அவரது வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து வந்த மாங்காடு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஸ்ரீனிவாசன் ஆன்லைன் கடன் செயலில் முதலில் இரண்டு லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

கடனை திருப்பி செலுத்திய அவர் மீண்டும் ஒருமுறை அதில் கடன் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. இதை கட்ட முடியாமல் போக கடனை கேட்டு ஆன்லைன் செயலியின் நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததும் சீனிவாசன் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அவருக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பியதும் தெரிய வர மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.