ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகள் 2 வாரங்களில் வெளியிடப்படும் – அமைச்சர் பாண்டியராஜன்!

கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகளை 2 வாரங்களில் வெளியிட மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

கீழடியில் கண்டுபிக்கப்பட்ட செங்கல் கட்டுமானம் அலுமினிய கட்டுமானம் போன்று இலகுவானது. கீழடி அகழ்வாய்வில் எவ்வித மத அடையாளமும் கண்டறியப்படவில்லை என்று தகவல் அளித்துள்ளார். மேலும் கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் 2021 ஜனவரி மாதம் திறக்கப்படும் என்றும் கீழடிக்கு வரும் பார்வையாளர்களுக்கு உரிய வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

கீழடி அகழாய்வில் 15,000 பொருட்கள் கிடைத்துள்ளன, அகழாய்வில் கிடைத்த பொருட்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என அவர் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3ம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்டநிலையில் 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது.

இதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த ஆண்டு நடந்த 5ம் கட்ட அகழாய்வில் 33 குழிகள் தோண்டப்பட்டு இரட்டை மற்றும் வட்டச் சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறை கிணறுகள் என 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில் ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டு பிப்.19ம் தேதி 6ம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அதில் மூன்றரை அடி ஆழத்தில் சுண்ணாம்பு சுவர் ஒன்று முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. இச்சுவர் ஒரு அடி வரை இருந்தது. இதனை தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் குழாயின் தொடர்ச்சியை கண்டறிய அதன் மேற்கு பகுதியில் அகழாய்வு பணியை தொடங்கியது. அதில் கடந்த வாரம் 4 அடி ஆழத்தில் 2 அடுக்குகள் கொண்ட தரை தளம் தென்பட்டது. தொடர்ந்து கலைநயமிக்க தாழிகள், சின்னச்சிறு மண்பானைகள், கூம்பு வடிவிலான மூடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.