அவனியாபுரத்தை சேர்ந்த அனைத்து சமூக மக்களையும் இணைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்த ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது..

அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும், சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டால் அவனியாபுரம் அனைத்து சமுதாய கிராம மக்கள் இணைந்து ஆலோசனை குழுவை உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளனர்.

வழக்கின் பின்னணி : 

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த முனியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர்.அதில், தை 1ஆம் தேதி மதுரையில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அவனியாபுரத்தை பொருத்தவரை அம்பேத்கர் நகர் பகுதியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த 1000க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.. பிறசமூகத்தினரும் வசித்து வருகின்றனர். 2022 ஆம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கூடிய சூழல் உள்ளது.. எனவே 2022 ஆம் ஆண்டு போன்று அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பாக விசாரணை வந்தது, அப்போது அரசு தரப்பில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு என அரசு பல்வேறு ஏற்பாடுகளையும், செலவுகளையும் செய்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கென நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அவனியாபுரத்தை பொருத்தவரை  ஜல்லிக்கட்டு போட்டிக்கென பல்வேறு சமூகத்தினரும், அமைப்புகளும் கமிட்டியை உருவாக்கி வருகின்றனர். பல்வேறு விதமான சமாதான கூட்டங்கள் நடத்தியும், இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. ஆகவே மாவட்ட நிர்வாகம் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், 2022-ல் நீதிமன்ற உத்தரவுபடி ஒருங்கிணைப்பு குழுவில் அதிகாரிகளும், ஆலோசனை குழுவில் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாயத்தினரையும் ஒன்றிணைத்து குழு உருவாக்கி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதே ஆண்டும் அதேபோல குழு அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் ஆலோசனை குழுவின் வேலை என்ன? ஒருங்கிணைப்பு குழுவின் வேலை என்ன? என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் ஆலோசனை குழுவை பொறுத்தவரை  கிராமத்தில் அனைத்து சமுதாய உறுப்பினர்களும்  இணைந்து காளைகளை தேர்வு செய்வது, பந்தல்கால் நடுவது, விழாக்களை நடத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு அரசு தரப்பில், இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டைப் பொறுத்தவரை ஆலோசனை குழு என ஏதும் அமைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதிகள், அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து நாளை மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமாதான கூட்டத்தை நடத்த வேண்டும். சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டால் அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய கிராம மக்களை இணைத்து ஆலோசனை குழுவை உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம்.. ஒருவேளை தீர்வு கிடைக்கவில்லையானால் ஆதிதிராவிட நலத்துறையின் இணை இயக்குனரை இணைத்து மாவட்ட நிர்வாகம் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும். அதேபோல ஒருவேளை மதுரை அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய மக்கள் இணைந்து ஜல்லிக்கட்டு குழு அமையப்பெற்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டால், அதில் ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்..